"மணலுண் முழுகி மறந்து கிடக்கும்
நுணலுந் தன் வாயாற் கெடும்'

என "பழமொழி நானூறு' எனும் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றில் மூன்றை அரையனார் எனும் புலவர் பாடியுள்ளார். மண்ணிலும், பாறைகளுக்கு இடையிலும் வாழும் தவளை (நுணல்) தன் வாயால் கத்தி தன் இருப்பிடத்தை எதிரிக்குக் காட்டிக் கொடுக்கும் என்கிற பொருளில் பாடினார். பொதுவாக தண்ணீர் நிறைந்த இடத்தில் தவளைகள் வாழும்போது மழை பெய்தால் மகிழ்ச்சியில் கத்தும். அப்படிக் கத்தும் குணம் கொண்ட தவளைகள் உடையார் பாளையத்தில் எழுந்தருளியிருக்கும் நறுமலர் பூங்குழலி நாயகி உடனான ஸ்ரீ பயறணீஸ்வரர் திருக்கோவிலின் மிகப்பெரிய தீர்த்த குளத்தில் (காண்டீப தீர்த்தம்) வாழும் தவளைகள் மட்டும் கத்துவதே இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவில் உடையார் பாளையம் ஜமீன்தாரர்களின் ஆதரவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. முற்காலத்தில் இப்பகுதியை முற்கபுரம் (முற்கபுரி) என அழைத்தனர். தமிழ்த் தாத்தா உ.வே. சுவாமிநாதையரின் தமிழ் ஆசான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815-1876) இயற்றிய மாயூர புராணத்தில், "மன்னவன் முதல் வானரெலாம் வந்து தொழ வரங்கொடுத்து முன்னவனெக் காலுமமர் முற்கபுரம்'' எனப் பாடியுள்ளார். இதிலிருந்து இத்தலத்தின் தொன்மையையும், சிறப்பையும் அறியலாம்.

Advertisment

மிளகு பயிராக மாறியது முற்காலத்தில் மலை நாட்டில் வசித்துவந்த ஒரு வணிகன் அரசு சுங்கச்சாவடி வழியாக தன்னுடன் விவசாய விளைபொருட்களை எடுத்துச்செல்வது வழக்கம். சுங்கச் சாவடியில் மிளகுக்கு சற்று வரி அதிகமாக வசூலிப்பது அன்றைய நடைமுறை. மிளகை ஏற்றி வந்த அந்த வணிகன் வரியை குறைவாக செலுத்தவேண்டும் என்கிற நோக்கில் சுங்க ஊழியர்களிடம் பயிரை எடுத்துச்செல்வதாக பொய் கூறி தப்பித்தான். உடையார் பாளையத்திலிருந்து விருத்தாசலம் சந்தைக்கு எடுத்துச்சென்ற மூட்டைகள் எல்லாம் மிளகுக்குப் பதிலாக பயிராக இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அதிக விலைக்கு விற்கும் மிளகுகள் எப்படி பயிராக மாறியது என வேதனைப்பட்டான். உடன் சென்ற மற்ற வணிகர்கள் உடையார்பாளையத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானிடம் வேண்டினால் பலனுண்டு எனக் கூறியதால் கோவிலுக்கு வந்து இறைவனிடம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்தான்.

இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னைஇனிய நினையாதார்க்கு இன்னா தானைவல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்...என திருநாவுக்கரசர் பாடிய தேவார பதிகத்தில் வரும் ஒரு பாடலில் தன்னை நாடி, நம்பிவந்து சரண் அடைந்தவர்களுக்கு அருள்புரிவதில் சிவபெருமான் வல்லவன் எனப் பாடியது போன்று வணிகனின் பிரார்த்தனையை ஏற்று மீண்டும் மிளகாக மாறச் செய்தார். இதனால் வணிகன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து இச் செய்தியை ஊரெங்கும் சொல்லி மகிழ்ந்தான். எனவேதான் சிவபெருமானுக்கு பயறணீஸ்வரர் என்கிற பெயர் வந்தது.  சிவபெருமானுக்கு முற்கபுரிஸ்வரர் எனும் மற்றொரு பெயரும் உண்டு. முற்கம் என்றால் வடமொழியில் பயிறு என்கிற ஒரு பொருளுண்டு.

வில் வளைத்த விநாயகர்

Advertisment

ஏறத்தாழ 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோவிலுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட சோழர்கள், விஜயநகர மன்னர்கள் திருப்பணியை செய்துள்ளனர். அதன்பின்னர் பல்லவர்களின் வழித்தோன்றல்களான "காலாட்கள் தோழ உடையார்' என்கிற பட்டப் பெயருடன் ஆட்சிபுரிந்த உடையார்பாளையம் ஜமீன்தாரர்களின் ஆட்சிக் காலத்தில்தான் கோவிலும் அதை அடுத்த பெரிய குளமும் சீர்செய்து விரிவாக்கப்பட்டது. ஊரும், கோவிலும் வளர்ச்சி பெற்றது சின்ன நல்லப்ப உடையார் என்கிற சிற்றரசரான ஜமீன் காலத்தில்தான் என உடையார்பாளையம் ஜமீன்தாரர்களின் வரலாறு நமக்கு தெரிவிக்கிறது.

முற்காலத்தில் வனவாசத்தில் இருந்த பஞ்சபாண்டவர்கள் அன்று காடாகவும், வெறும் நிலப்பரப்பாகவும் இருந்த இந்த தலத்திற்கு வருகை தந்தபோது தண்ணீர் தாகம் எடுக்கவே, சுற்று வட்டாரத்தில் குளம், நதி இல்லாததால் விநாயகப் பெருமானை வேண்ட அவர் அர்ச்சுனனுடைய காண்டீப வில்லை வளைத்து நிலத்தில் அம்பு ஏய்தி தண்ணீரை வரவழைத்தார். அந்த தண்ணீர் வந்த இடமே இன்றைய காண்டீப தீர்த்தம் எனும் மிகப்பெரிய குளம். குளத்தின் வடிவம் சற்றே வில் வடிவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள விநாயகருக்கு "வில் வளைத்த விநாயகர்' என்கிற பெயரும் இதனால் ஏற்பட்டது. என்றும் வற்றாத பெரிய குளமாக விளங்கும் இக்குளத்தின் கரையில் அகத்திய முனிவர் சிலகாலம் தங்கி பூஜை, தவம் செய்துள்ளார். ஒருநாள் அவர் தவம் செய்துகொண்டு இருக்கும்போது குளத்தில் இருந்த தவளைகள் அவரது தவத்தை கலைக்கும்வண்ணம் சத்தமிட்டுக்கொண்டே இருந்தன. இதனால் கோபமடைந்த அகத்தியர் இக்குளத்தின் தவளைகள் இனி கத்தவே கூடாது என சாபமிட்டார். அன்று அவர் இட்ட சாபம் இன்றுவரை தொடர்வது ஓர் அதிசயமான நிகழ்வு. 

ஆலய திருப்பணி

தொன்மைவாய்ந்த இக்கோவிலுக்கு விரைவில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 
அதற்கான பணிகள் தற்சமயம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதைப்பற்றி கோவில் பரம்பரை அறங்காவலரும், தற்போதைய உடையார் பாளையம் ஜமீன்தார் அரசபரம்பரையின் 28-ஆம் தலைமுறை "கச்சி சின்னப்ப காலாட்கள் தோழ உடையார்' ஸ்ரீமத். பி.கே. ராஜகுமார் பழனியப்பன் கூறியதாவது, "தமிழகத்தில் இருக்கும் ஜமீன்களின் பழமையான ஜமீன் உடையார்பாளையம் ஜமீனும் ஒன்று. எங்கள் முன்னோர்கள் ஆன்மிகம், கல்வி, கலை போன்ற துறைகளில் சிறந்து விளங்கியது மட்டுமின்றி போர்புரிவதில் வல்லவராகவும் திகழ்ந்தனர். ஸ்ரீ நல்லப்ப உடையாரின் ஆட்சிக்காலத்தில் முஸ்லீம் படையெடுப்பு இருந்த தருணத்தில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன், வரதராஜப் பெருமாள், ஏகாம்பரேசுவரர் கோவில்களில் இருந்த வழிபாட்டு மூர்த்தி விக்கிரகங்களை உடையார் பாளையம் அரண்மனையில் பத்திரமாக பாதுகாத்து பின்னர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர். அன்றைய அரசியல் சூழ்நிலையில் இது மிகப்பெரிய சாதனை என்றே கூறலாம். சுதந்திரத்திற்குபின்பு ஜமீன் ஒழிப்பு சட்டத்தால் பல கிராமங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனால் வருவாய் குறைந்ததால் எங்களுடைய பழமையான பெரிய அரண்மனையை பராமரிக்ககூட முடியவில்லை. மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளித்து, புராதன சின்னத்தை காக்க தக்க நடவடிக்கையும், உதவிகளையும் செய்வார்கள் என நம்புகிறேன்'' என்று ஏக்கத்துடன் தெரிவித்தார்.

தற்சமயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவிலுக்கு விரைவில் மகாகும்பாபிஷேக நிகழ்வு நடைபெறவுள்ளது. நம்முடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற ஸ்ரீ பயறணீஸ்வரரை வழிபடுவோம். இயற்கையை ரசிக்க விரும்பும் ஆர்வலர்களுக்கு இக்கோவிலின் பெரிய குளம் ஓர் வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

மேலும் தகவல்: ஸ்ரீமத் பி.கே. ராஜ்குமார் பழனியப்பன்.

பரம்பரை ஜமீன்தாரர் அலைபேசி: 99433 41599, 97914 64738.